Monday, February 29, 2016

தினம் ஒரு பாசுரம் - 66

தினம் ஒரு பாசுரம் - 66


செடியாய வல்வினைகள் தீர்க்கும் திருமாலே

நெடியானே வேங்கடவா நின் கோயிலின் வாசல்

அடியாரும் வானவரும் அரம்பையரும் கிடந்தியங்கும்

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே!


--- பெருமாள் திருமொழி (குலசேகராழ்வார்)


சேரநாட்டில், கோழிக்கோடு தலத்தில், அரச வம்சத்தில் பிறந்த குலசேகரன், பகவான் ஸ்ரீராமபிரான் பேரில் தீவிர பக்தி கொண்டவர். ராமாயண கதாகாலட்சேபம் நடந்த சமயங்களில் கூறப்பட்டவற்றை, ராமர் மேல் அவருக்கிருந்த அன்பினால், வெகு காலத்திற்கு முன் நடந்தேறிய ராம வரலாற்றை அன்று தான் நடப்பதாக எண்ணிக் கொள்ளும் வழக்கம் உடையவர் இந்த ஆழ்வார்! இதனால், அவரிடம் ராமகதையை விவரிப்பவர்கள், ராமருக்கு துன்பம் நேர்ந்த பாகங்களை சுருக்கியும், ராமரின் கீர்த்தியையும், வீரத்தையும், மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தும் பாகங்களை விரிவாகவும் உரைத்து வந்தனர்! பெருமாளுடைய (ஸ்ரீராமர்) இன்ப துன்பங்களை தனது சுகதுக்கங்களாக கருதியதால் குலசேகரருக்கு 'பெருமாள்' என்ற திருநாமமும் உண்டு.

பெருமாள் திருமொழியில், ராமனை குழந்தையாக பாவித்து தாலாட்டு பாடுவது போல் அமைந்த மிக அழகிய பாசுரங்கள், ராமன் மேல் அவருக்கிருந்த பேரன்பில் விளைந்தவை!

பாசுரப்பொருள்:

செடியாய வல்வினைகள் - (மானிடப்பிறவியில்) பெருகும் தன்மை கொண்ட கொடிய பாவங்களை
தீர்க்கும் திருமாலே - ஒழிக்க வல்ல (பரம்பொருளான) திருமாலே
நெடியானே வேங்கடவா -  உயர்ந்து நிற்கும் திருவேங்கடத்து அண்ணலே
நின் கோயிலின் வாசல் - உனது (திருமலைக்) கோயில் சன்னதியின் வாசலில்
அடியாரும் வானவரும் - (உனது) அடியார்களும் இமையவரும்
அரம்பையரும் - தேவ மகளிரும்
கிடந்தியங்கும் - ஏறிக் கடந்து செல்லும்
படியாய்க் கிடந்து - (ஒரு) படியாகக் கிடந்து
உன் பவளவாய் காண்பேனே! - உனது பவளச் செவ்வாய் அழகை (எப்போது) கண்டு மகிழ்வேனே !

பாசுரக்குறிப்புகள்:

திருப்பதி மலையில் வீற்றிருக்கும் திருமால், வராக அவதாரம் எடுத்து இரண்யாட்சனைக் கொன்று பூதேவியை தன் கொம்புகளால் மீட்டுக் கொண்டு வந்ததாகப் புராணம் கூறுகிறது.

செடியாய வல்வினைகள் - "செடி" என்பதற்கு பல பொருள்கள் உண்டு. அவை "புதர்; நெருக்கம்; பாவம்; தீமை; துன்பம்; தீநாற்றம்; அற்பம்; ஒளி; குற்றம்".
"செடி" என்பதை புல்/புதர் என்று எடுத்துக் கொண்டால், மானிடப்பிறவியில் வளர்ந்து கொண்டே இருக்கும் இயல்புடைய பாவங்களை ஆழ்வார் குறிப்பிடுகிறார் என்று தெளியலாம். "செடியார்  வினைகள் தீர் மருந்தே திருவேங்கடத்து எம்பெருமானே" என்று நம்மாழ்வாரும் திருவாய்மொழிப் பாசுரம் ஒன்றில் அருளியிருக்கிறார்.  தீமை/துன்பம் என்று பொருள் கொண்டாலும் பொருத்தமே. "நமக்குக் கேடு விளைவிக்கும் கொடும்பாவங்கள்" என்றாகிறது.   ஆக,  நமது கொடிய பாவங்களைக் களைய வல்லவன், இக்கலியுகத்தின் கண்கண்ட தெய்வமான திருமலை வாழ் எம்பிரான் ஒருவனே என்பது பாசுரம் தரும் செய்தி.

நெடியானே - வாமன வடிவத்தில் வந்து பின் வானுக்கும் மண்ணுக்குமாய் நெடிதுயர்ந்து நின்ற  திரிவிக்கிரமனை  ஆழ்வார் போற்றுவதாகக் கொள்வது தகும்.

அடியாரும் வானவரும் அரம்பையரும் - மண்ணவர், விண்ணவர் என்று சகலரும் அடி பணியும் திருத்தலம், கோவிந்தன் எனும் ஸ்ரீநிவாசன் அருள் பாலிக்கும் திருமலையே! திருவேங்கடமுடையானின் அடியவரை, தேவ கணங்களுக்கு நிகராகச் சொல்வதாகக் கொள்வதிலும் ஒரு நயம் உள்ளது தானே!

கிடந்து இயங்கும் - முந்தைய 2 பாசுர இடுகைகளில் விளக்கிய  "சென்று சேர்", "அமர்ந்து புகுந்து"  போல, இதற்கும் நயம் சார் விளக்கம் தரலாம். "கிடந்து" என்பது சரணாகதித்துவத்தைச் சொல்கிறது. அடிப்பற்றலுக்குப் பின்னரே "இயக்கம்" வருகிறது.  எத்தைகைய இயக்கம்?  

மருள் இல் இயக்கம் --- அறியாமை இருள் தரும் மயக்கம் நீங்கிய, பேரின்பத்தை நோக்கிய ஆன்ம இயக்கம்! இங்கு அறியாமை என்பது, புலன்சார் இன்பங்களுக்கு அடிமையாய் இருத்தல், பரமனே கதி என்ற புரிதல் இன்றி இருத்தல், அகந்தை, பொறாமை, பிறர்க்குத் தீது நினைத்தல்/செய்தல்  என பலவகைப்படும்.

இதை "புலன் சார்"  நல் இயக்கமாகவும் பார்க்கலாம். எங்ஙனம்? வாயானது பரமனைப்  போற்றுகிறது, கண்ணானது அவன் திருவழகைப் பார்க்கிறது (உன் பவளவாய் காண்பேனே!), செவியானது சக அடியவரின் ஹரி நாம சங்கீர்த்தனத்தைக் கேட்கிறது.

படியாய்க் கிடந்து உன் பவளவாய் காண்பேனே - இப்பாசுர வரியே, திருமலைக் கோயிலின் (பிற விஷ்ணு ஆலயங்களிலும் கூட) உள்வாயிற்படி, "குலசேகரன் படி" என்று அழைக்கப்படுவதற்குக் காரணம்.

--- எ.அ. பாலா

Friday, February 26, 2016

தினம் ஒரு பாசுரம் - 65

அகலகில்லேன் இறையுமென்று அலர்மேல் மங்கை உறை மார்பா 

நிகரில் புகழாய் உலகம் மூன்றுடையாய் என்னை ஆள்வானே


நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே 


புகல் ஒன்றில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே


---நம்மாழ்வார் (திருவாய்மொழி)

இன்று இன்னொரு திருவேங்கடமுடையான் திருப்பாசுரத்தை அனுபவிக்கலாம். திருக்குருகைப்பிரான் அருளிய 1102 பாசுரங்களில், கோயிலிலும், இல்லத்திலும்  தினம் ஓதுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட 12 பதிகங்களின்  (12 X 11 = 132 பாசுரங்கள்) தொகுப்பு  "கோயில் திருவாய்மொழி" என்று அழைக்கப்படுகிறது. இப்பாசுரம், அத்தொகுப்பில் வருகிறது. அற்புதமானதொரு பாசுரம் இது.

பாசுரப்பொருள்:

அகலகில்லேன் - "(உன்னை விட்டு) பிரிய மட்டேன்
இறையுமென்று - ஒரு நொடியும்" என்று
அலர்மேல் மங்கை - தாமரை  மலரில் அவதரித்த திருமகள் ஆனவள்
உறை மார்பா - தங்கி இருக்கும் திருமார்பை உடையவனே!
நிகரில் புகழாய் - ஒப்பில்லா பெருமை வாய்ந்தவனே!
உலகம் மூன்றுடையாய் - நாகலோகம்,பூவுலகம், வானுலகு என்ற மூவுலகங்களின் நாயகனே!
என்னை ஆள்வானே - என்னை அடிமையாக ஏற்றவனே!
நிகரில் அமரர் முனிக்கணங்கள் - நிகரற்ற தேவர்கள் மற்றும் முனிவர்களின்
விரும்பும் திருவேங்கடத்தானே - பேரன்புக்கு பாத்திரமான, திருமலையில் எழுந்தருளியிருக்கும் அண்ணலே!
புகல் ஒன்றில்லா - தஞ்சம் புக (வேறு) இடம் ஒன்றுமில்லாமல்
அடியேன் - (உன் பக்தனான) நான்
உன் அடிக்கீழ் - உனது திருவடியின் கீழே
அமர்ந்து புகுந்தேனே - தங்கி சரண் அடைந்தேனே !
பாசுரக்குறிப்புகள்:
வைணவர்கள் பிரபந்தப் பாசுரங்களை இசை நயத்துடன் ஓதும்போது, செவிக்கு இனிமையாக இருக்க வேண்டி, கடினமான சொல் ஏவல்களை தவிர்ப்பர்.  "ற்ற" என்பதை "த்த" என்றும், "ன்ற" என்பதை "ன்ன" என்றும் திருத்தியே ஓதுவர். இப்பாசுரத்தை எடுத்துக்கொண்டால் ஓதுவது இப்படி இருக்கும்.

அகலகில்லேன் இறையுமென்னு அலர்மேல் மங்கை உறை மார்பா
நிகரில் புகழாய் உலகம் மூன்னுடையாய் என்னை ஆள்வானே
நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும் திருவேங்கடத்தானே
புகல் ஒன்னில்லா அடியேன் உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே

'போற்றி" என்பது "போத்தி" என்றே ஓதப்படும் ( அன்னு இவ்வுலகம் அளந்தாய்  அடி  போத்தி - திருப்பாவை  )
"கற்று" என்பது "கத்து" ஆகிவிடும் (கத்துக்  கறவை கணங்கள்  பல கறந்து - திருப்பாவை)


இது ஆழ்வாரின் பேரன்பை வெளிப்படுத்தும் எளிமையான பாசுரமே.  நயம், உட்பொருள் சார் குறிப்புகள் சிலவற்றை பார்ப்போம்.

"அகலகில்லேன் இறையுமென்று" -  ஒரு நொடியும் (இறையும்) பிரிந்திருக்க மாட்டேன் என்று பிராட்டியே பரமன் மார்பில் குடி கொண்டு விட்டதில் அடியவர்க்கு 2 செய்திகள் உள்ளன. ஒன்று,  திருமாலை சிக்கெனப் பற்றி சரண் புகுவதே உய்வுக்கான வழி. இரண்டு, நாம் தவறுகள் செய்தாலும், நமக்கு அருள் செய்ய  பரிந்துரைக்க (புருஷகாரம்) அக்கடல் அன்னை அப்பரந்தாமன்  கூடவே வாசம் செய்கிறாள்.

திருமாலுக்குரிய கல்யாண குணங்களில்  நான்கு குணங்கள் மிகவும் ஏற்றமானவை. அவை
1. வாத்சல்யம் (பேரன்பு)
2. சுவாமித்துவம் (தலைமையான இறைத்தன்மை).  அதாவது கடவுளர்க்கெல்லாம் தலைமைத்தன்மை உடையவனாக  இருக்கும் சிறப்பைக் கூறுவது
3. சௌசீல்யம் (ஏற்ற தாழ்வு பாராமை). அதாவது உயர்ந்தவன்/தாழ்ந்தவன், அறிவாற்றல் மிக்கவன்/குறைந்தவன்  என்ற பேதங்கள் பாராமல் அருளுவது
4. சௌலப்யம் (எளிமைத்தன்மை ). அதாவது, உலகமாயைக்கு அப்பாற்பட்டவனான  பரந்தாமன் மனித வடிவில் வந்து அடியவரோடு வாழ்வது / உதவுவது.

தன்னைச் சரணடையும் அடியவரிடம் பரமன் இவற்றைக் காட்டுகிறான்.   அவதார காலங்களில், இராமனாக, கிருஷ்ணனாக, அவன் நேரடியாக அவற்றை வெளிப்படுத்தியது நாம் அறிந்ததே, குகன், அனுமன் , விபீடணன், யசோதா, அருச்சுனன், திரௌபதி, குசேலன்  என்று பல எடுத்துக்காட்டுகள் உள்ளன.மேற்கூறிய 4 குணங்களும் இப்பாசுரத்தில் போற்றப்பட்டுள்ளன.

"நிகரில் புகழாய்" எனும்போது  வாத்ஸல்யத்தையும்,  "உலகம் மூன்றுடையாய்" எனும்போது  சுவாமித்துவத்தையும், "என்னை ஆள்வானே" என்று சௌசீல்யத்தையும், "நிகரில் அமரர் முனிக்கணங்கள் விரும்பும்  திருவேங்கடத்தானே" எனும்போது  சௌலப்யத்தையும் ஆழ்வார் குறிப்பில் உணர்த்துகிறார்.

"நிகரில் அமரர்" - ஏன் தேவர்களை ஒப்பில்லாதவர் என்கிறார் ஆழ்வார்? பரமபத வாசம் கிடைக்காவிட்டாலும், திருமாலை எப்போது வேண்டுமானாலும் தரிசிக்கும், அவனது நெருக்கத்தை அனுபவிக்கும் உரிமை உடையவர்கள் அந்த வானவர்கள்! 

"அகலகில்லேன் இறையுமென்று" என்பதை  ஆழ்வார் தன்னைப்பற்றி  சொல்லிக் கொள்வதாக அணுகுவதிலும் ஒரு சுவை இருக்கிறது. "உன்னை விட்டுப் பிரியவே கூடாது என்று" என்று ஆழ்வார் பாசுரத்தைத் தொடங்கி, உடனடியாக அவருக்கு பெருமாளின்  கல்யாண குணங்கள் நினைவுக்கு வந்து அடுத்த 2 அடிகளில் அவற்றைப் போற்றி விட்டு மீண்டும் 4வது வரியில் "வேறு புகல் எதுவுமே இல்லாத எளியனான நான் உன்னிடம் பூரண சரணாகதி அடைந்து விட்டேன்" என்று அவனைப் பிரியாத நிலைக்கு தான் என்ன செய்தார் என்பதைக் கூறி பாசுரத்தை நிறைவு செய்கிறார். கடைசியில், திருவடி நிழலை கன்ஃ பர்ம் பண்றதுக்குத் தான் நம்ம ஆழ்வார் நடு 2 அடிகளில் "எவ்வளவு பெரிய ஆள் நீ!" என்று பரமனின் சீர்மிகு குணங்களைப் போற்றுகிறார் போல :-)

உன் அடிக்கீழ் அமர்ந்து புகுந்தேனே - முந்தைய பாசுர இடுகையில் சொன்ன  "சென்று சேர் திருவேங்கட மாமலை" போல இதிலும் பொருள் பொதிந்துள்ளது. அவசர கதியாக, தடாலடியாகப்  புகும் சரண் அன்று இது!  இது, தவமிருந்து, உடலும், ஆன்மாவும் ஒன்றுபட்ட நிலையில் அவன் திருவடியைப் பற்றுவது. "அமர்ந்து" என்பது உடல் சார்ந்த (Physical) அமைதியைக் குறிப்பதாகவும் "புகுந்தேனே" ஆன்மா  சம்பந்தப்பட்டதாகவும் (of spirit, spiritual) கொள்ளலாம் தானே?

---எ.அ. பாலா

Monday, February 22, 2016

தினம் ஒரு பாசுரம் - 64

தினம் ஒரு பாசுரம் - 64

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் 

அன்று ஞாலம் அளந்த பிரான் பரன் 


சென்று சேர் திருவேங்கட மா மலை 


ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே


-திருவாய்மொழி (நம்மாழ்வார்)


பொருள்:

குன்றம் ஏந்திக் - கோவர்த்தன மலையை (தனது ஒரு விரலால் உயர்த்திப் பிடித்து
குளிர் மழை காத்தவன் - (ஆயர் குல மக்களை) குளிர்ந்த பெருமழையிலிருந்து  காத்தவனும்
அன்று - முன்னொரு காலத்தில்
ஞாலம் அளந்த பிரான் - (தனது திருவடிகளால்) உலகங்களை அளந்த நம் தலைவனும்
பரன் - (அனைத்து உயிர்களையும் ரட்சிக்கும்) எம்பெருமானும்
சென்று சேர் - சென்று தங்கி (அருள் பாலிக்கும்)
திருவேங்கட மா மலை ஒன்றுமே -  திருமலை ஒன்றை மட்டுமே
தொழ  - (போற்றி) தொழுதோமேயானால் 
நம் வினை ஓயுமே - நமது பாவங்கள் யாவும் தொலைந்து போகுமே 
பாசுரக்குறிப்புகள்: 

நம்மாழ்வாருக்கு (ஏன் எல்லா ஆழ்வார்களுக்கும்) உகந்த கிருஷ்ண மற்றும் த்ரிவிக்ரம அவதாரங்கள் பாசுரத்தில் சுட்டப்படுகின்றன. அவற்றின்  பெருமை வாயிலாக,  கலியுகத்தில் அர்ச்சாவதார கோலத்தில் பெருமாள் திருவேங்கடமுடையானாக எழுந்தருளியுள்ள திருமலை திவ்விய தேசத்தின் மேன்மையை ஆழ்வார் பாசுரத்தில் போற்றுகிறார்.  கலியுகத்தில் "போற்றப் பறை தரும் புண்ணியன்" ஆனவன் அர்ச்சாவதாரா ரூபத்தில் அருளும் புண்ணியத் தலங்களில் தலையான மூன்றில் ஒன்று திருமலை. மற்றவை அவன் பள்ளி கொண்ட திருவரங்கமும், திருமந்திரம் அருளிய பத்ரிகாசிரமும் ஆகும்.


 கலியுகத்தில் திருவேங்கடமுடையான் ஒருவனைப் பற்றினாலே போதுமானது என்று அடியவர் நமக்கு ஆழ்வார் அறுதியிட்டுக் கூறுகிறார்.  நம் தீவினைகள் அனைத்தையும் அழித்து நம்மை தடுத்தாட்கொள்ள வல்லான் அவன் ஒருவனே என்கிறார்.


சுட்டப்பட்ட 2 அவதாரச் செயல்களிலும் ஓர் ஒற்றுமையைக் காணலாம். தமது வலிமையால் அகந்தை கொண்டவர்கள் (இந்திரன், மாவலிச் சக்கரவர்த்தி) தவறை உணர்ந்து அப்பரமனைச்  சரண் புகுந்த செய்தி இரண்டிலும் வெளிப்படுகிறது அல்லவா?

கிருஷ்ண அனுபவத்துக்கு ஒரு வடிவம் கொடுத்தால் அது நம்மாழ்வார் என்னும் அளவு, கிருஷ்ண பக்திப் பேருவகையில் திளைத்து நமக்கு திராவிட வேதம் அருளியவர், வைணவத்தின் ஆதி குருவான, திருக்குருகைப் பிரான்!

குன்றம் ஏந்திக் குளிர் மழை காத்தவன் - ஆயர்கள் ஆண்டுதோறும் இந்திரனுக்கு விழா எடுத்து, அவனுக்குப் பல்வகையான  உணவுகளைப் படைப்பது வழக்கம். ஒரு சமயம் கண்ணபிரான், சூரியனும், வருணனும், கோவர்த்தன மலையும் சேர்ந்தே நமக்கு எரிக்க விறகும், உண்பதற்கு காய்கனிகளும், பசுக்களுக்குப் புல்லும் தருகையில், இந்திரனுக்கு விழா எதற்கு என்று ஆயர்களைத் தடுத்து விட்டான்.

அகந்தையின் காரணமாக கடுஞ்சீற்றம் கொண்ட இந்திரன், புயல் காற்றையும், பெருமழையையும் உண்டாக்கி (கண்ணனின் அன்புக்குரிய) ஆயர்கள் அஞ்சி நடுங்கும்படி செய்தான். அப்போதும் அந்த மாயக்கண்ணன் இந்திரன் மேல்  கோபப்படவில்லை. குழந்தையிடமிருந்து ஒன்றைப் பிடுங்கிக் கொண்டால் அது அழுது ஆர்ப்பாட்டம் பண்ணும் என்பதை அறியாதவனா அந்தப் பரந்தாமன் :-) ஆனால், இந்திரனின்  அகந்தை அழிய  வேண்டும் , அவனுக்கு புத்தி வரவேண்டும் என்பதற்காகவே கண்ணனின்  "குன்றம் ஏந்தி குளிர்மழை காத்த" விளையாட்டு!

சென்று சேர் திருவேங்கட மாமலை - பரமன் சென்று தங்கி அருள் பாலிக்கும் திருமலை என்பது நேரடிப்பொருள். இதை இன்னொரு விதமாக பொருள் கொள்வதிலும் நயம் உள்ளது. அதாவது அடியவரான நாம் சென்று சேர வேண்டிய இடம் அந்த திருவேங்கட மாமலையே என்றும் கொள்ளலாம்.  அங்கு சென்றால் போதும் அல்லது சேர்ந்தால் போதுமே! எதற்கு "சென்று சேர" வேண்டும்? செல்லுதல் என்பது உடல் சார்ந்தது, சேர்தல் என்பது நம் மனம் (ஆன்மா) சார்ந்தது. அடியவரின் உடலும் உள்ளமும் ஒத்துழைத்தால்  தான், இறைவனைப் பற்ற இயலும், உய்வுக்கான பாதையில் பயணிக்க முடியும்.  அதாவது மெய்/ஆத்ம சுத்தி என இரண்டும் தேவை.

உய்வு (பரமபதம்/மோட்சம்) என்பது அழிவில்லா ஆன்மாவுக்குத் தானே! உடலுக்குத் தொடர்பு இல்லையே, என்று நமக்குத் தோன்றும். இவ்வுலகில் ஆன்மா தனியாக இயங்குவதில்லை, உடல் என்ற வாகனத்தின் பாதையோடு பிணைந்தது தான் ஆன்மாவின் வாழ்க்கையும்

மேலே சொன்னதை நம்மாழ்வார் வாழ்வில் நடந்த ஒரு நிகழ்வுடன் ஒப்பு நோக்கினால் "சென்று சேர்" என்பதின் சாராம்சத்தை தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.  பின்னாளில் நம்மாழ்வாருக்கு சீடரான மதுரகவியார், ஆழ்வாரை முதலில்  சந்தித்தபோது "செத்ததின் வயிற்றில் சிறியது பிறந்தால், எத்தைத் தின்று எங்கே கிடக்கும்?" என்ற கேள்வியை வீச, கண் திறந்த ஆழ்வார், "அத்தைத் தின்று அங்கே கிடக்கும்" என்று பதில் அருளினார். இந்த கேள்வி பதிலுக்கான உட்பொருள் ஆழமானது. இங்கே செத்தது என்பது உடல், சிறியது என்பது உயிர் (அ) ஆன்மா

எளிமையாக விளக்க வேண்டுமென்றால், பிறப்பின் போது, ஒரு ஆன்மா எந்த வகையான உடலுள் புகுகிறதோ அவ்வுடலுக்கேற்ப அதன் தோற்றத்திற்கேற்பவே சுகதுக்கங்களை அடைய முடியும் என்றும், மெய்ஞானத்தை உணர்வதில் உடலெனும் கூடுக்கும் பங்கிருக்கிறது என்ற செய்தியும் இதில் பொதிந்திருப்பதாகக் கொள்ளலாம்! ஆக, ஆன்மா உய்வுற (முக்தி ) ஒரு பிறப்பே போதுமானதாகவும் இருக்கலாம், பல பிறப்புகளும் தேவைப்படலாம்.

--- எ.அ.பாலா

Sunday, February 07, 2016

"எங்க தெரு" நாய்கள்

பராசக்தி ஸ்டைலில் சொல்லணும்னா நாய்களின் ”கூடாரமாகி” விட்டது எங்கள் தெரு. குறைந்தது, 12-15 நாய்கள் இருக்கின்றன. இதற்கு முக்கியக் காரணம் எனது தெருவில் வசிக்கும் சமவயதினரான நண்பர் ஒருவர் தான். அவர் ஒரு மகா நாய்ப்பிரியர், பெர்முடாஸ் போட்ட பைரவர் போலவே காட்சியளிப்பார். அந்த நாய்களுக்கு உணவளித்து பராமரித்து வந்தார். ஒரு 6 மாதங்களுக்கு முன் ஒரு விடியற்காலை வேளையில் மாரடைப்பு ஏற்பட்டு, ஐந்தே நிமிடங்களில் மரித்துப்போனார். அத்தனை ஆரோக்கியமாகத் தோன்றிய ஒருவர் இப்படி திடீரென்று மரணித்தது எங்கள் தெருவில் பலருக்கும் அதிர்ச்சியைத் தந்தது! சரி, மேட்டருக்கு வருவோம்.

அவரின் பிரிய தெரு நாய்களுக்கும் அவர் மரணம் அதிர்ச்சியோடு, சோகத்தையும் தந்திருக்க வேண்டும். ஒரு 10 நாட்கள், இரவு வேளைகளில் ஆர்ப்பாட்டமாக குரைத்து, தெருவுக்குள் நுழைந்த எந்த ஒரு உயிரினத்திற்கும், பயமும், வெறுப்பும் ஏற்படுத்திய அவை, அமைதி காத்தன. அவ்வப்போது, அழுகையான ஓலத்தை மட்டும் வெளிப்படுத்தின. இரவுகளில் பல தடவை எங்கள் நிம்மதியையும், உறக்கத்தையும் குரைத்துக் குலைத்த நாய்கள் இப்படி ஆகி விட்டனவே என்று நானே அனுதாபப்பட ஆரம்பித்தபோது, எல்லா நாய்களும் பழைய நிலைக்குத் திரும்பி அவைகளும் மனிதர்களுக்கு சற்றும் சளைத்தவை அல்ல என்று நிரூபித்தன.

என் அனுபவத்தில், எங்கத் தெரு நாய்கள் ரேசிஸம் அற்ற லிபரல்கள். இரவில் தெருவுக்குள் நுழையும் எவருக்கும், சாதி, இன, மத பேதமின்றி ஒரே வகை கவனிப்பு தான். ஒரு முனையிலிருந்து இன்னொரு முனை செல்லும் வரை, பின்னாலேயே கூட்டமாகச் சென்று பலவிதமாக சவுண்ட் விட்டு பயத்தையும் எரிச்சலையும் ஏற்றுவது. ஆனால், இதுவரை யாரையும் கடித்ததில்லை. ஆனால் பாருங்கள், அவைகள் கடிக்காது என்பது புதிதாக வரும் ஒரு நபருக்குத் தெரிவதில்லை. தூக்கம் வராத அல்லது தூக்கம் கெடுக்கப்பட்ட இரவுகளில், எங்கத் தெரு நாய்களின் நடவடிக்கைகளை பால்கனியில் நின்றபடி ”குரைப்பாராய்ச்சி” செய்ததுண்டு! சில சமயங்களில், வெறி அடங்காத குரைப்பை நிறுத்த தமிழ் சினிமா சொல்லித்தந்த ஒரு பாலபாடத்தையும் பிரயோகித்திருக்கிறேன், பால்கனியிலிருந்து பக்கெட் தண்ணீரை அவற்றின் மீது ஊற்றுவது (அ) இறைப்பது. பலனும் கிட்டியிருக்கிறது, தற்காலிமாக இருப்பினும். இனி எனது இரவு ஆராய்ச்சியின் முக்கிய முடிவுகள்:

 1. உற்சாகத் தருணங்களில் நாய்கள் மென்மையாகக் குரைக்கின்றன. புணர்ச்சிக்கான மார்கழி மாத பூசல்களின்போது குரைத்தலைக் குறைத்து, பற்களைக் காட்டி, நாய்கள் ஏற்படுத்தும் “ஓடிப்போயிடு மவனே, கொன்னேபுடுவேன்” வகை அடித்தொண்டை உறுமல்கள், அமானுஷ்ய அச்சத்தை விளைவிக்க வல்லவை.


பல மார்கழிகள் கண்ட (படத்தில் காணப்படும்) கறுப்பழகி ஒன்று பலப்பல குட்டிகளை ஈன்று, தெருவின் ”நாய்த்தொகை” குறையாமல் இருக்கும்படியாக சேவை ஆற்றியுள்ளதை இங்கே குறிப்பிடவேண்டும். தாய்மையால் பக்குவம் அடைந்த அது குரைப்பதேயில்லை!

2. மூத்தோர் இளையவரை டிசிப்ளின் செய்யும் பொருட்டும், குரைத்தல் நிகழ்கிறது.

3. வேற்றுத்தெரு நாய்கள் படையெடுப்பின்போது, போர்க்களமாகும் தெருவில் கேட்கும் குரைப்புச்சத்தம், Dolby ஸ்டீரியோவில் முழு வால்யூமில் ஜுராசிக் பார்க் படத்தை பார்க்கும் எஃபெக்டை தர வல்லது.

4. சில அரிதான சமயங்களில், ஒற்றை வேற்றுத்தெரு நாய், எங்கள் தெரு (நாய்) ஜோதியில் ஐக்கியமாக வர முயலும்போது, குரைத்தலோடு நிகழும் விஷயங்கள் சுவாரசியமாய் இருக்கும். அந்த நாய், தலையைத் தொங்கப்போட்டு, கூனிக்குறுகி வந்தாலும், எங்கத் தெரு நாய்கள் அதை உடனே கூட்டாளியாகச் சேர்ப்பதில்லை. ரொம்பவும் Harass பண்ணும். போக்கடமற்ற புதிய நாயும், ஓடிப்போகாமல், ஒரு காருக்கு அடியில் ஒளிந்து கொண்டு, கெஞ்சிய வண்ணம் இருக்கும். சில சமயங்களில், தலைவரின் முடிவுப்படி, புதிய நாய் அங்கீகரிக்கப்படும். அல்லது, கார் மாற்றி மாற்றி வெகுவாக அலைக்கழிக்கப்பட்டு, கடியும் பட்டுத் துரத்தப்படும். இந்த குரைத்துத் துரத்தும் வைபவத்தைக் காண்பது, டிவிட்டர் அரட்டையை விட டைம்பாஸாக இருக்கும்.5. திருவல்லிக்கேணியின் மூத்தகுடி என்று சொல்லும் அளவு பிரபலமானவை மாடுகள். இரவில் ஒரு மாடு எங்கள் தெருவுக்குள் நுழைந்து விட்டால், அதன் கதி அதோகதி தான். எல்லா நாய்களும் அதைச் சூழ்ந்து கொண்டு பண்ணும் Ragging-ல் ”கொம்பைக் காணோம், வாலைக் காணோம்” என்று (நடக்கவே யோசிக்கும்) அந்த சோம்பேறி மாடு ஓடுவது செம :-)

6. எங்கத் தெரு நாய்கள் டிராஃபிக் விதிகளை மதிப்பவை. தெருவில் செல்லும் பைக், சைக்கிள் ஓவர் ஸ்பீடிங் செய்தால் மட்டுமே துரத்தும், இல்லையெனில், சின்னக்குரைத்தலோடு விட்டு விடும்.

மேற்சொன்ன எங்கத் தெரு இரவுக்காவலர்கள், “இரவினில் ஆட்டம், பகலினில் தூக்கம், இது தான் எங்கள் உலகம்” என்பதற்கேற்ப பகல் வேளைகளில், ஒவ்வொன்றும் ஒவ்வொரு மூலையில் சுருண்டு தூங்கும்போது, ‘இதுகளா இப்படி?” என்ற பிரமிப்பு ஏற்படுகிறது.

---எ.அ.பாலா

Wednesday, February 03, 2016

லாங் லாங்கர் லாங்கஸ்ட் By டீக்கடை எனும் @teakkadai

 டிவிட்டர் நண்பர் @teakkadai (https://twitter.com/teakkadai) அவர்களின் எழுத்துகளின் ரசிகன் நான். மிக நேர்த்தியாக, யதார்த்தமாக அதே நேரம் எளிமையாகவும் எழுதுபவர். சமீபத்தில் ஒரு சிறுகதையை டிவிட்லாங்கரில் பதிப்பித்திருந்தார்.  அதை உங்கள் வாசிப்புக்கு என் வலைத்தளத்தில் பகிர்கிறேன்.  கதைக்கு அவர் தலைப்பு இடவில்லை. ஆகவே, கதைத் தலைப்பு மட்டும் என்னுடையது.
--எ.அ.பாலா

லாங் லாங்கர் லாங்கஸ்ட் - By @teakkadai

மதியத்தூக்கம் கலைந்து மாடியில் இருந்து கீழிறங்கி வந்தேன். வீடு வழக்கத்துக்கு மாறாக சத்தம் ஏதுமில்லாமல் இருந்தது. அம்மாவும், மனைவியும் டிவி பார்த்துக் கொண்டிருந்தனர். டீ வேண்டுமா எனக் கேட்ட அம்மாவிடம் ம் என்று சொல்லிக்கொண்டே திவ்யா எங்கே? என்று கேட்டேன். ”அவ எல்லாப் பிள்ளைகளையும் கூட்டிக்கிட்டு நம்ம பழைய தெருவுக்கு போயிருக்கா” என்றார். தங்கை திவ்யாவும், நானும் ஒவ்வொரு வருடம் பொங்கல் விடுமுறையிலும் ஊருக்கு வருவதை வழக்கமாக்க் கொண்டவர்கள்.

சிறிது நேரம் கழித்து பிள்ளைகளுடன் திரும்பி வந்த திவ்யா, ”ராதிகாவைப் பார்த்தேன். ஆளே உருக்குலைஞ்சு போயிட்டா, முடியெல்லாம் கொட்டி, இருக்குற முடியும் வெள்ளையாகி, கூன் விழுந்து பார்க்கவே பாவமா இருந்துச்சு என்றாள். பாவம் என்ன செய்யுறது என்று சொல்லியபடியே வெளியே கிளம்பினேன்.

பிறந்த ஊர் என்றாலும் நாங்கள் இப்போது இருக்கும் பகுதி அவ்வளவாக எனக்கு பழக்கம் இல்லாத ஒன்று. எதிர்ப்படுபவர்கள் யாரையும் அடையாளம் தெரியவில்லை. கால் போனபடி நடந்து கொண்டிருக்கும் போது ராதிகாவின் நினைவு வந்தது.

ராதிகா, நாங்கள் முன்பு குடியிருந்த வீட்டிற்கு எதிர்வீட்டில் குடியிருந்த பெண். சுற்று வட்டாரத்தில் பிரபலமான ரைஸ்மில் ஒன்றை ராதிகாவின் அப்பா நடத்தி வந்தார். நானும் ராதிகாவும் தொடக்கப்பள்ளியில் ஒன்றாகப் படித்தவர்கள். ஆறாம் வகுப்பின் போது அவள் மகளிர் மேல்நிலைப்பள்ளிக்கும், நான் ஆண்கள் மேல்நிலைப்பள்ளிக்கும் மாறினோம். அவளது அண்ணன் அவளைவிட ஏழு வயது மூத்தவன், அவன் அப்போது வெளியூர் கல்லூரி ஒன்றில் விடுதியில் தங்கி படித்துக் கொண்டிருந்தான். ராதிகாவின் தந்தையும் அவரது பங்காளி வகையறாக்களும் பெரிய ஆசாடபூதிகள். வீட்டு விலக்கான பெண்கள் கையால் தண்ணீர் வாங்கிக்கூட குடிக்க மாட்டார்கள்.

அவர்கள் வீட்டிலேயே கொல்லைப்புறம் அருகே ஒரு பெரிய அறையையே அந்த நாட்களில் தங்குவதற்காக கட்டி வைத்திருப்பார்கள். தட்டு டம்ளர் முதல் போர்வை தலையணை வரை கிட்டத்தட்ட ஒரு லாட்ஜ் அறையைப் போலவே அது இருக்கும். அந்த அறையில் உபயோகப்படுத்தவென்றே ஒரு ட்ரான்ஸிஸ்டர் கூட பிரத்யேகமாக அங்கே இருக்கும்.
Drawing courtesy: Anikartick

எனவே ராதிகாவின் அம்மா வீட்டு விலக்கான நாட்களில் ராதிகாவின் அண்ணன் தான் ஹோட்டலில் இருந்து பார்சல் வாங்கிக்கொண்டு வருவான். அவன் ஹாஸ்டலுக்குச் சென்ற பின்னால் அந்த வேலை என் தலையில் விழுந்தது. கொண்டு செல்லும் பாத்திரங்களை வைத்தே ரைஸ்மில் காரருக்கா என ஹோட்டலில் கேட்டு பார்சல் தருவார்கள். ராதிகா சகஜமாக, எங்க அம்மா, லாங் என்று சொல்வாள். இது சில வருடம் நீடித்தது, எட்டாம் வகுப்பு முழுப்பரிட்சை லீவில் ராதிகா பெரிய பெண் ஆனாள். அதன்பின் எனக்கு அந்த வீட்டிற்குள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

பின்னர் பத்தாம் வகுப்பு படிக்கும்போது ஒருநாள், டியூசனில் இருந்து வீடு திரும்பியவுடன், அம்மா என்னிடம் “ரைஸ்மில் காரம்மா வந்திருந்தாங்க, ஏதோ நோட்ஸ் எல்லாம் ராதிகாவுக்கு வேணுமாம்” என்றார். அவள் தந்தை அவளை டியூசனுக்கு அனுமதிப்பதில்லை மேலும் மாத விலக்கான நாட்களில் அவள் பெரும்பாலும் பள்ளிக்குச் செல்வதில்லை என்பதால் என்னுடைய டியூசன் நோட்ஸை கேட்டிருந்தாள். என் தங்கையின் மூலம் நோட்ஸ் அவள் வீட்டிற்குச் சென்றது.

இந்நாட்களில் ராதிகாவின் அண்ணன் சென்னையில் ஒரு பெரிய நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் வீட்டில் உடல்நிலை சரியில்லாத நாட்களில் வேறுவழியில்லாமல் கடைகண்ணிக்குச் செல்ல என்னையே மீண்டும் அவர்கள் நம்பவேண்டியிருந்தது. தொடர்ந்து ராதிகாவிற்கும் பிளஸ்2 நோட்ஸ், ரெக்கார்டு நோட் என என் தயவு பெரிதும் தேவைப்பட்ட்து. தெருப்பையன்கள் எல்லாம் அவளுக்கு உன்மேல லவ்வு என்றெல்லாம் ஏத்தி விடுவார்கள். சொந்த ஜாதியில் இருக்கும் ரைஸ்மில் வேலைக்காரர்களை கூட வீட்டில் அனுமதிக்காத ராதிகாவின் அப்பா என்னை அங்கே புழங்க விட என் மீதுள்ள நம்பிக்கைதான் காரணம் என்பதால் நான் அதை சிரித்துக் கொண்டே கடக்க பழகியிருந்தேன்.

பிளஸ் 2 முடித்ததும் கல்லூரிக்கும் அனுப்ப ராதிகாவின் தந்தைக்கு இஷ்டமில்லை. ஆனால் அவரின் உறவினர்கள், நம்ம ஆட்கள்ல இப்ப படிச்ச பிள்ளைகளைத்தான் கட்டுறாங்க எனச் சொல்லி கல்லூரிக்கு அனுப்ப வைத்தனர். எங்கள் ஊரில் கல்லூரி இல்லாததால் வெளியூர் கல்லுரிக்கு அனுப்பி வைத்தனர்,அங்கே விடுதியில் தங்கிப் படித்தாள். இன்னொரு கல்லூரியில் நானும்.

ராதிகா இரண்டாம் ஆண்டு படிக்கும் போது, அவள் அண்ணனுக்கு ஒரு மிகப்பெரிய இடத்து சம்பந்தம் வந்தது. அவள் அப்பா கூட, முதல்ல பொண்ணு கல்யாணம் அப்புறம் தான் பையனுக்கு என்று பிடிவாதம் பிடித்துப் பார்த்தார். ஆனால் அவரின் உறவினர்கள் வற்புறுத்தி சம்மதிக்க வைத்துவிட்டார்கள். கல்யாணத்தின் போது பச்சைப் பட்டுப்பாவாடையும், மாம்பழக் கலர் தாவணியும், ஒற்றை ஜடையுடன், நீண்ட மெல்லிய டாலர் செயினுடன் வளைய வந்த அவளைக் கண்ட உறவினர்கள் எங்க பையனுக்குத்தான் உங்க பொண்ணைக் கொடுக்கணும் என்று சண்டையே போட்டார்கள். பந்தி பரிமாறுதலில் ஈடுபட்டிருந்த என்னை அவள் அடிக்கடி ஓரக்கண்ணால் பார்த்தாள் என நண்பர்கள் சொல்ல அதை வழக்கம் போல நான் காதில் போட்டுக்கொள்ளவில்லை.

ராதிகாவின் அண்ணன் சென்னையில் செட்டில் ஆகியிருந்தான். நானும் படிப்பு முடிந்து சென்னையில் ஓராண்டு போராடி ஒரு வேலையில் அமர்ந்தேன். என்ன இன்னும் ராதிகாவின் திருமண செய்தி வரவில்லையென யோசிக்கத் தொடங்கியிருந்தேன். ஊருக்கு வந்தபோது, ஸ்வீட் வாங்கிக் கொண்டுபோய் வேலை கிடைத்த விபரத்தை ராதிகா வீட்டாரிடம் சொன்னேன். வீடே களையிழந்து கிடந்த்து. அம்மாவிடம் கேட்ட போது அதெல்லாம் உனக்கெதுக்கு என்று கடிந்து கொண்டார்,

பின்னர் விஷயம் தெரியவந்தது. ராதிகாவிற்கு மாதவிலக்கானது மூன்று, நான்கு நாட்களில் முடியாமல் ஒரு வாரம் பத்து நாள் வரை நீண்டதாம். அதனால் உடல்நிலை தளர்ந்து போனாளாம். தொடர்ந்து வைத்தியம் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும் கேள்விப்பட்டேன்.

இன்னும் ஒரு வருடம் போனது. ராதிகாவின் உடல்நிலையில் எந்த மாற்றமும் ஏற்படவில்லை. இன்னும் இளைத்துப் போயிருந்தாள். அவள் வீட்டிற்குச் சென்றபோது லாங்,லாங்கர், லாங்கஸ்ட் ஆயிடுச்சுடான்னு விரக்தியாகச் சிரித்தாள்.

இந்த விசயம் அரசல் புரசலாக வெளியில் தெரிந்ததால் அவர்களுக்கு ஈடானவர்கள் யாரும் சம்பந்தம் பேசவரவில்லை. வசதி குறைவானவர்களோ மாசம் பாதிநாள் அவ படுத்துக்கிட்டானா யாரு வேலையெல்லாம் பார்க்கிறது, தங்க ஊசின்னு கண்ணுல குத்திக்க முடியுமா என ஒதுங்கிக் கொண்டார்கள். ராதிகாவுக்கு 25 வயது ஆன நிலையில் அவர் அம்மா தெருவில் ஒருநாள் எந்த ஜாதின்னாலும் பரவாயில்லை, கேட்டா முடிச்சிடலமுன்னு இருக்கோம் என்று ஜாடை மாடையாக்கூட சொல்லிக் கொண்டிருந்தாராம்.

அந்நேரம் தங்கைக்கு மாப்பிள்ளை பார்க்கத் தொடங்கியிருந்தோம். லோன் மூலம் வீடுகட்டி முடித்திருந்த நிலையில் நாங்கள் இப்போதிருக்கும் வீட்டிற்கு மாறியிருந்தோம். அதன்பின் தங்கை கல்யாணம், என் கல்யாணம், பிள்ளைகள், சென்னை வாழ்க்கை என அந்த தெருவில் இருந்தே ஒதுங்கி விட்டோம்.

வீடு திரும்பிய பின்னரும் ராதிகாவின் நினைவுகளால் மனம் அலைந்தது. அவள், ஹாலில் மாட்டியிருந்த தன் அண்ணனின் திருமணத்தில் எடுத்த போட்டோவை வெறித்தபடியே என்னிடம் பேசியது ஞாபகம் வந்தது. மாடி காலியிடத்தில் நிலை கொள்ளாமல் உலாத்திக் கொண்டிருந்த போது தங்கை வந்தாள். சில நிமிடம் மௌனமாய் இருந்த அவள், நீ அவள கல்யாணம் பண்ணுவேன்னு நினைச்சிக்கிட்டு இருந்தேன். ஏன் நீ எந்த ஸ்டெப்பும் எடுக்கலை? என்றாள். உங்கண்ணன் மகனான்னு கேட்டு பாசமா தலையத் தடவிக் கொடுத்தா, உன் பேரைச் சொல்லும் போது அவ கண்ணுல இன்னும் காதலப் பார்த்தேன் என்றாள்.

இல்ல, அப்ப உன் கல்யாணம்தான் எனக்கு பெரிசாப் பட்டுச்சு. பணத்துக்காக வேற ஜாதியில கல்யாணம் பண்ணிட்டான்னு இல்ல ஏமாத்தி கல்யாணம் பண்ணிட்டான்னு உன் புகுந்த வீட்டுல நீ பேச்சுக் கேட்கக்கூடாதுன்னு நெனச்சேன் என்றேன். கண்கள் பனிக்க என்னைப் பார்த்தபடி இறங்கிப் போனாள் என் தங்கை. இரவில், மனைவி, என்னிடம் திவ்யா சொல்றதுல்லாம் உண்மையா? எனக் கேட்டாள்.

சேச்சே, சும்மா அவள திருப்திப்படுத்த சொன்னேன். உண்மையச் சொல்லணும்னா எனக்கு சின்ன வயசில இருந்தே என் மனைவி இந்த உயரம் இருக்கணும், முகம் இப்படி இருக்கணும், இந்தக் கலர் இருக்கனும்னு கனவு கண்டுக்கிட்டு இருந்தேன். அப்படியே நீ இருந்த, அதனால தான் உன்னைய கட்டிக்கிட்டேன் என்றேன். காதலாய் பார்த்தாள்.

காலையில் வாக்கிங் போகும் போது அப்பாவும் உடன் வந்தார், என்னடா திவ்யா சொன்னது உண்மையாடா? உனக்கு ஒரு அபிப்ராயம் இருந்தா சொல்லி இருக்கலாமேடா? என்றார். நான் உடனே அப்பா நீங்க எங்களுக்காக ரொம்பக் கஷ்டப்பட்டுட்டீங்க, நோயாளி பொண்ணக் கட்டி உங்களுக்கு இன்னும் சிரம்ம் கொடுக்கக் கூடாதுன்னுதான் அதப் பத்தியே யோசிக்கலை என்றேன். என்னை பெருமையாகப் பார்த்தன அவர் கண்கள்.

வீடு திரும்பி, குளிக்கும் போது, பாத்ரூம் கண்ணாடியில் தெரிந்த என் முகம், ஆளுக்கு தகுந்த படி பொய் சொன்னாயே, காமுகா, மாதம் பாதி நாளு தூரமாகிறவளால எவ்ளோ சுகம் கிடைச்சிடும்னு கணக்குப் பண்ணித்தான அவாய்ட் பண்ணுன? எனக்கேட்க குற்ற உணர்ச்சி தாங்காமல் ஷவருடன் சேர்ந்து அழத்தொடங்கினேன்.
**********************************************************

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails